கடற்படையினரின் சீருடையுடன் சென்று 45 லீட்டர் பெற்றோலை பெற்றுகொண்டதாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்தார். கம்பளை அங்கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டது.
தற்பொழுது நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் நாட்கணக்கில் வரிசையில் காத்திருந்து எரிபொருளினை பெற்று கொள்ளும் நிலையில் சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு கடற்படை சீருடையுடன் வந்து கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்றுக்கு தேவையென கூறி கேன் ஒன்றில் 45 லீட்டர் பெற்றோலினை பெற்றுகொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் கடற்படை ஒழுக்க விதிமுறைகளை மீறி தன் சொந்த தேவைக்காக சீருடையுடன் வந்து பெற்றோல் பெற்றுகொண்டமை தொடர்பாக தலாத்து ஓயா கடற்படை முகாம் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அவர் கம்பளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் பொலிஸாரரினால் கைது செய்து கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
