தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் அதன் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அட்டன் பீக்ரெஸ்ட் விருந்தகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
· தொழிலாளர் தேசிய சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க சேவைகளினூடாக மேற்கொள்ள அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் திடசங்கற்பம் பூணுதல்.
· நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் ஆகிய இருவரும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதர தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்தல்.
· தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றுக்கு விரைவில் பேராளர் மாநாட்டை நடத்தி, ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாக முக்கிய பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை நியமித்தல்.
· கட்சியின் கட்டுப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அனைவரது செயற்பாடுகளும் அமைய வேண்டும். அதேநேரம், கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாக தன்னிச்சையாக யாரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
· கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக எந்த விதமான பாகுபாடும், பாரபட்சமும் இன்றி பதவி நிலைக்கு அப்பால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
· தொழிலாளர் தேசிய சங்கத்தின் யாப்புக்கு அமைய, அதன் உள்ளடக்கத்தை தெரிந்து கொள்ளாமல் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். எனவே, இனிமேல் யாப்பின் அடிப்படையில் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல்.
மேற்படி நிர்வாக சபையில் உள்ள 21 உறுப்பினர்களில் பின்வருவோர் கலந்து கொண்டார்கள்.
பழனி திகாம்பரம் – தலைவர், மயில்வாகனம் உதயகுமார் – பிரதித் தலைவர், எஸ். பிலிப் – பொதுச் செயலாளர், ஜே.எம். செபஸ்டியன் – நிதிச் செயலாளர், சோ. ஸ்ரீதரன் – பிரதி நிதிச் செயலாளர் உட்பட உபதலைவர்களான வீ.கே. ரட்னசாமி, ஓ.எஸ். மாணிக்கம், எஸ். இராசமாணிக்கம், வீ. சிவானந்தன், ஏ. இராஜமாணிக்கம், உதவிச் செயலாளர்களான எஸ். வீரப்பன், ஏ. வைல்ட்மேரி,
பி. கல்யாணகுமார், ஆர். சிவகுமார், தேசிய அமைப்பாளர் ஜீ, நகுலேஸ்வரன், பிராந்திய தேசிய அமைப்பாளர்களான ஆர். விஜயவீரன், கே. கல்யாணகுமார், ஏ. பிரசாந்த், நிர்வாக இயக்குனர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார் ஆகியோர்.