ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளரை அறிவித்தது தவறான முடிவாகும் என்று அக்கட்சியின் தவிசாளரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உலக அரசியலில் கட்சி தலைவர் இருக்கின்றார் என்பதற்காக உறுப்பினர்கள் மௌனம் காக்கமாட்டார்கள். தலைவர் தவறிழைத்தால் அதனை சுட்டிக்காட்டும் தைரியம் இருக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே வேட்பாளரை தெரிவுசெய்ய வேண்டும். அது எந்த கட்சியாக இருந்தாலும் அப்படிதான் நடக்கும். இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மக்களின் மனநிலை, கருத்து கணிப்பு, ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டே வேட்பாளர் தேர்வு இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் சம்பிரதாயப்பூர்வமாக தேர்வு இடம்பெறக்கூடாது. இந்த நடைமுறைக்கு எதிராக கட்சிக்குள் நான் கதைத்துள்ளேன்.
சஜித் வேட்பாளராக இருக்கலாம். ஆனால் காலம் இருக்கும்போது முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்தது சரி என கூறமுடியாது.
வெற்றி வேட்பாளர் ஒருவரை அதாவது மக்கள் கோரும் வேட்பாளரையே கட்சி நிறுத்த வேண்டும். தலைவரைதான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றிபெறமுடியாவிட்டால் அவருக்காக நான் வேலை செய்யபோவதில்லை என அறிவித்துள்ளேன்.
சஜித்துக்கு பதிலாக மற்றுமொருவர் வர வேண்டும் என கூறவில்லை. உரிய ஆய்வுகளின் பின்னரே முடிவெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் மக்கள் கருத்து முக்கியம். மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும்.” – என்றார்.
