கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக் குழுவுடனான கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்போது இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே சுகாதார துறை அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் ஆகியோருடன் ஆராய்ந்து வருகின்றனர். அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார்.
மேலும், பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. 7 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை.
1, 2, 3 மற்றும் 4 வகுப்புகளை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட்-19 பரவல் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
வழிகாட்டல்களை தயாரிக்கும் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.