கட்டுத்துவக்கு வெடிப்பு – தந்தை பலி: மகள் படுகாயம்! பசறையில் சோகம்!!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெமேரியா தோட்ட, மாத்தென்ன பிரிவுக்கு அண்மையில் அமைந்துள்ள ரிட்டிக்காதோவ கிராமத்தில் உள்ள வீடொன்றில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி (கட்டுத் துவக்கு) தவறுதலாக இயங்கி வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதில் சுனில் சாந்த (வயது 29) என்ற குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

அத்துடன் அவருடைய இரண்டரை வயது நிரம்பிய மகள் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வெடிப்பு சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

சம்பவ தினமிரவு வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கவே குடிபோதையில் இருந்த குடும்பஸ்தர் தனது இரண்டரை வயது நிரம்பிய மகளை கையில் தூக்கிக்கொண்டு சமையலறை பகுதியில் இருந்த துப்பாக்கியை எடுத்து நிலத்தில் தட்டிக் கொண்டு வெளியில் செல்லும் போதே துப்பாக்கி இயங்கி குறித்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் போதே குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles