கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில் நேற்று (22) இரவு 10.45 மணியளவில் பஸ்ஸொன்றும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தார்.
இந்த சொகுசு பஸ் எப்போதும் இணையத்தில் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தெஹிவளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மட்டக்களப்பு வரை இயங்கும். அவ்வாறே நேற்று இரவு குறித்த பஸ்ஆடியம்பலம் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற கம்பஹாவைச் சேர்ந்த 25 வயதான சதுரங்க ஹேரத் சிறிவர்தன மற்றும் அதே வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த 19 வயதான சரித் பிரியதர்ஷன ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் சாரதி கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜேரத்னவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்து பிரிவு பிரதி பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.சிசிர குமாரவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.










