பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இன்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முன்வைத்த வாதப் பிரதிவாதிங்களைத் தொடர்ந்து எவ்வித திருத்தங்களுமின்றி, வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதன்படி, தனி வர்த்தகம், நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்கள் தொடர்பிலும் இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதம் திருத்தம் செய்யப்படவுள்ளது. மேலும், இது தொடர்பில் ஒரு நீதவான் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்குப் பின்னர், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்கள் மீது இந்த அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.