‘கண்டியில் நானே தமிழ் வெற்றி வேட்பாளர்’ – வேலுகுமார்

கண்டி மாவட்டத்தில் வெற்றிபெறக்கூடிய ஒரேயொரு தமிழ் வேட்பாளர் நான்தான். இதனை எமது மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில் தமிழ் வாக்குகளை சிதறடிக்கவைப்பதற்கான முழு மொத்த சூழ்ச்சியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சியை முறியடிப்பதே எமக்கான சவாலாக இருக்கின்றது.இதனை  கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

கண்டி மாவட்டத்தில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 100 வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இவற்றில் சுமார் ஒரு லட்சமே தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையாகும். எனவே, தமிழ் வாக்குகள் சிறு அளவில் பிரிந்துசென்றால்கூட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தாக அமைந்துவிடும்.

இவ்வாறு நடைபெறவேண்டும் என்பதே பேரினவாதிகளின் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. இதற்கு காலாகாலமாக சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இம்முறையும் அதே ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாம் வெற்றிபெறமாட்டோம் என தெரிந்தும் வெத்து வேட்பாளர்களாக களமிறங்கி சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளனர்.

எனினும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது எமது மலையக சமூதாயத்தின் அடையாளம் மட்டுமல்ல அது எமக்கான அரசியல் உரிமையும்கூட என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெற்றி வேட்பாளர்களுக்கே அவர்கள் வாக்களிப்பார்கள். இதன்மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும். நானே அந்த வெற்றி வேட்பாளர்.” – என்றார்.

Related Articles

Latest Articles