கண்டி மாவட்டதில் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான களப்பணிகள் இதொகாவால் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் பிரசாத் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
‘கண்டி மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை இழப்பை தாண்டி, கண்டி தமிழ் மக்களின் ஆணைக்கிணங்க அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தும் புதிய அரசியல் பயணத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டி மாவட்டதில் மேற்கொள்வதற்கான களப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதி கண்டி மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் தெளிவாக அறிந்துகொள்வதற்கு பேருதவியாக இருந்தது.
கடந்த காலங்களில் கண்டி மாவட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு தேவையான செயற்பாடுகளிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கடமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டிவாழ் சமூகத்தின் பங்காளர்கள், இளைஞர் யுவதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், மூத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பற்றாளர்களுடன் முன்னெடுக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
மேலும் உங்கள் காத்திரமான கருத்துக்களை 0774514214 என்ற இலக்கத்தினூடாக பகிர்ந்து கொள்ளுமாறும் பணிவாக கேட்டுக்கொள்ளுகிறேன்.” – என்றார்.
