மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் மத்திய மாகாண சபையின் கேட்போர்கூடத்தில் கூடியது.
இதன் போது பெருந்தோட்ட பகுதிகளுக்கும் அதனை அண்டி உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளுக்கும் துரித கதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கபட்டது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைபு இராஜாங்க அமைச்சின் பிரஜாஷக்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி,
கடந்த வாரம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக நுவரேலியா மாவட்டத்தில் கடந்த 9ஆம் திகதி முதல் 50, 000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறன . மேலும் தடுப்பூசி பெற வரும் அனைவருக்கும் தேவையான வசதிகளை நாம் சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வழங்கி வருகிறோம்.
மேலும் நேற்றைய தினம் முதல் பெருந்த்தோட்ட பகுதிகள் உள்ளடங்களாக நுவரேலியா கொட்டகலை ஹட்டன் மஸ்கெலியா போன்ற பல பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.
கண்டி மாவட்டத்தில் புதிதாக வழங்கப்படும் தடுப்பூசிகளை தொற்று அதிகமாக உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் வழங்க வேண்டும் என கோரிக்கையை பாரத் முன்வைத்தார். இக் கோரிக்கையை ஏற்ற ஆளுநர் உட்பட அமைச்சர்கள் அப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் இவ் வாரம் வழங்கப்படும் 50000 தடுப்பூசிகள் தொற்று அதிகமாக உள்ள கண்டி மாநகரசபை, பஸ்பாககோறளை மற்றும் பஹாததும்பர வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு வழங்கவும் விஷேடமாக நாவலபிட்டிய பெருந்த்தோட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும் இணக்கம் எட்டப்பட்டது.
மேலும் இதுவரை 487 மரணங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டில் தடுப்பூசிகளுக்கு கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எங்களின் கோரிக்கைக்கு அமைவாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கபடுகின்றன ஆனால் அதற்கு 63% ஆக குறைந்த அளவானோரே தடுப்பூசிகளை பெறுகின்றனர் எனவே இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து 60வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசிகளை பெற்றுகொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்வதாக பாரத் அருள்சாமி கோரிக்கை விடுத்தார்.
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, கெஹலிய ரம்புக்வல, லோஹன் ரத்வத்த, திலும் அமுனுகம கலந்து கொண்டதுடன் கண்டி நுவரேலியா மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.