கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அரசியல் வாதியொருவரின் மச்சான், கம்பளை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
‘யுக்திய’ தேடுதல் வேட்டையின்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரியின் மகன்மார் இருவர் கடந்த 29 ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் மச்சான், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு சோதனையிட்ட இரு பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார். எனினும், சோதனையிட்ட அதிகாரிகள் மன்னிப்புகோர மறுத்துள்ளனர்.
எனினும், குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மன்னிப்புகோருமாறு இரு அதிகாரிகளையும் பணித்துள்ளார். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிக்கையொன்றை வழங்கியுள்ளார்.
விசாரணை முடிவடையும்வரை குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், இரு பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
