” செப்டம்பர் மாதத்துக்குள் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் -பை தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என ரஷ்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது.” – என்று மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சீனாவிடமிருந்து மேலும் 40 லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இன்று (நேற்று) கிடைக்கப்பெற்றன. இதன்படி இதுவரையில் 22 பில்லியன் சினோ பாம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. ஒரு கோடி பேருக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதில் 73 லட்சம் பேருக்கு 2 அலகு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஸ்புட்னிக் – பை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 30 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோசும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை எப்போது வழங்கப்படும் என ரஷ்ய நிறுவனத்திடம் கேட்டோம். செப்டம்பர் மாதத்துக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.