” புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டை பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே பிள்ளையானுக்காக முன்னிலையானேன்.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
” பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன். சட்டத்தரணி என்ற அடிப்படையில் எனது சேவையாளருடன் இரகசியமாக கலந்துரையாடலாம். ஆனால் எமது உரையாடலை நான்கு பொலிஸார் முழுமையாக செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.
பிள்ளையான் கதறி அழுதவாறே என்னிடம் கேள்வி எழுப்பினார்.
‘ புலிகள் அமைப்பில் இருந்து விலகி, இராணுவத்துடன் இணைந்து , உயிரைக்கூட பணயம் வைத்து புலிகளைத் தோற்கடிப்பதற்கு போராடினேன்.
நல்லாட்சி காலத்தில் என்னை 5 வருடங்கள் தடுத்து வைத்திருந்தனர். இறுதியில் வழக்கு தொடுப்பதற்கு போதுமான சாட்சி இல்லை என்பதால் வழக்கு மீளப்பெறப்பட்டது. தற்போது மீண்டும் தடுப்பில் வைத்துள்ளனர்.
புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்காக, நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடியதாலா என்னை இப்படி நடத்துகின்றனர்.” என பிள்ளையான் மிகவும் உணர்வுப்பூர்வமாக என்னிடம் கேள்வி எழுப்பினார்.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.