கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்விவகாரம் மலையக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலேயே இந்த அழைப்பை அவர் விடுத்ததாகவும், தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும் கட்சி சகாக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கியதால் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அரவிந்தகுமார் மற்றும் கடந்த பொதுத்தேர்தலின்போது போட்டியிட்ட அனுசா சந்திரசேகரன் ஆகிய இருவரையும் இலக்கு வைத்தே இந்த அறிவிப்பு வெளியானதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தனிவழி பயணத்தை ஆரம்பித்துள்ள அனுஷா, மீண்டும் ராதாகிருஷ்ணன் தலைமையின்கீழ் செயற்படுவதற்கு தயாரில்லை என பல தடவைகள் அறிவித்துவிட்டார். எனினும், அரவிந்தகுமார் கட்சி செயற்பாட்டில் பங்கேற்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.