” இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போல தான் நாங்களும் கத்தாரில் தாக்குதல் நடத்தினோம்.” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம்( செப்.,09) கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் உயர் அரசியல் தலைவர்கள் வசிப்பிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல் நடத்தின.
இதில், கலில் அய் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. அதேபோல், கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால் அந்நாடு இஸ்ரேல் மீது ஆத்திரம் அடைந்தது. ‘ இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’ என்ற கடுமையாக விமர்சித்தது.
இந்த தாக்குதலுக்கு ஜோர்டான், சவுதி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: அல்கொய்தா பயங்கரவாதிகளை தேடி ஆப்கானிஸ்தான் சென்று, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்றதை போல் நாங்களும் செய்துள்ளோம்.
தற்போது பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்ற பிறகு அவர்கள் என்ன சொன்னார்கள்? ‘ ஐயோ, பாகிஸ்தானுக்கு என்ன ஒரு பயங்கரமான விஷயம் செய்யப்பட்டது?’ என சொன்னார்களா? அவர்கள் பாராட்டினார்கள் . அதேகொள்கைக்காக நின்று அதனை செயல்படுத்தும் இஸ்ரேலை அவர்கள் பாராட்ட வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் நெதன்யாகு கூறியுள்ளார்.