நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதால் கந்தப்பளை நகரம் உட்பட கந்தப்பளை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்க நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான விசேட கூட்டம் 30/11/2020 திங்கட்கிழமை கந்தப்பளை கிளை காரியாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் உட்பட உறுப்பினர்கள் கந்தப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர் கந்தப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர்கள் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கந்தப்பிள்ளை பிரதேசத்தில் 2 தொற்றாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய சகல இடங்களுக்கும் நுவரெலியா பிரதேச சபையின் மூலம் தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அவர்களினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 15 குடும்பங்களுக்கு கந்தப்பளை வர்த்தக சங்கத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கந்தப்பளை பிரதேசத்திலுள்ள அனைத்து தோட்ட புறங்களுக்கும் கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்கும், தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரின் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கந்தப்பளை நகரில் மரக்கறி வகைகள் ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வருகை தந்திருந்த அனைவருக்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்
