கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் 01 தோட்டத்தின் தனி வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோட்ட மயானத்தில் (15) மாலை 02 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு சடலமாக கடந்த (12) காலை 8.45 மணியளவில் மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என செல்லமாக அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி (வயது 08) என்பவராவார்.
இவ்வாறு உயிரிழந்த எட்டு வயது சிறுமி தனது வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த நிலையில் கழுத்தில் சீலை இறுகி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி உயிரிழந்தது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வலப்பனை நீதிமன்ற நீதவான் ஷிரந்த விக்கிரமரத்தின சடலத்தை சட்ட வைத்தியர் ஒருவரால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹைபொரஸ்ட் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த (13) காலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அன்றைய தினம் மாலை உடல் உறவினருக்கு கையளிக்கப்பட்டது.
சிறுமி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகங்கள் நிலவிய நிலையில் உடல் பகுதிகள் சில இரசாயன பகுப்பாய்வு பகுதிக்கு அனுப்பப்பட்டு அறிக்கையிடுமாறும் சட்ட வைத்தியர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சிறுமியின் உடலை எரிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று பெற்றோருக்கு சான்றிதழ் ஊடாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரசாயன பகுப்பாய்வு கிடைக்கப்பட்டதன் பின்னர் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவும் பட்சத்தில் மீண்டும் உடல் தோண்டியெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் சிறுமியின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணை வாக்கு மூலத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










