கனடாவில் ஏப்ரல் 28 பொதுத்தேர்தல்!

அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை பிரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தாண்டு ஒக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, மக்கள் செல்வாக்கு சரிந்ததால், பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ஆளும் லிபரல் கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் பதவியை இராஜினாமா செய்தார்.

கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவுடன், இம்மாதம் 9ம் திகதி, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய வங்கியின் முன்னாள் கவர்னரான அவர், சிறந்த பொருளாதார நிபுணராகக் கருதப்படுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், கனடாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

மேலும், அதிக வரிகளை விதிப்பதாகவும் அறிவித்தார். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக சேர்க்கப் போவதாக கூறி வந்தார். ஜஸ்டின் ட்ரூடோவை, கனடா மாகாணத்தின் கவர்னர் என்றே அழைத்து வந்தார்.

அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மளமளவென உயர்ந்தது. இதனால் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், கனடாவுக்கும் மன்னராக உள்ள, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான, கவர்னர் ஜெனரல் மேரி சைமனை, பிரதமர் மார்க் கார்னி நேற்று சந்தித்தார்.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பரிந்துரையை அவர் அளித்தார்.

கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியைவிட, ஆளும் லிபரல் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

Related Articles

Latest Articles