வரவு – செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம் கூறியதை நிச்சயம் செயற்படுத்துவோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இதுவரைக் காலமும் ஆட்சி செய்த சகல ஆட்யாளர்களுக்கும் பெருந்தோட்டதொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டார்களே தவிர, அவர்களது நலன்களில் அக்கறைகொள்ளவில்லை.
அதேபோன்றுதான் சம்பள விவகாரத்திலும் தொடர்ச்சியாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்காமலேயே சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் முடிந்தால் 10 ரூபாவை அதிகரித்துக் காண்பிக்குமாறு சவால் விடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு 1350 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த சம்பளத்துடன் அரசாங்கம் 200 ரூபாவை வழங்குகிறது.
கம்பனிகள் 200 ரூபாவை வழங்குகின்றன. அதற்காக 500 கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை.
முதன் முறையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 500 கோடி ரூபா நிதியை ஒதுக்கியிருக்கிறது. எனவே எமக்கு சவால் விடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்தி, தம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தொடர்ச்சியாக நீங்கள் அந்த மக்களை ஏமாற்றியதால் தான் அவர்கள் உங்களை புறந்தள்ளியிருக்கின்றனர். மலையக பிரதிநிதிகளில் சிலர் தற்போது சஜித் பின்னாலும், சிலர் நாமல் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த இரு திசைகளிலுமே மலையக மக்கள் இனி பயணிக்கப் போவதில்லை.
நீங்கள் கூறுவதையும் மக்கள் இனி கேட்கப் போவதில்லை. ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இந்த சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகளால் வழங்கப்படும் 200 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அரசாங்கத்தால் வழங்கப்படும் 200 ரூபா வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாகும்.
கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம் கூறியதை நிச்சயம் செயற்படுத்துவோம் என்றார்.
