பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கின்றது. சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் 1, 700 ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் – என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
மடூல்சீமையில் இருந்து ராகல ஊடாக பிட்டமாறுவை வரை செல்லும் பிரதான வீதி ராகலையில் இருந்து பிட்டமாறுவை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது .
குறித்த வீதிக்கு நேற்றைய தினம் 2 கிலோமீட்டர் தூரம் பாதையை செப்பனிடுவதற்காக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பாராளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் சம்பள உயர்வு தொடர்பில் நான் தொடர்ந்து கருத்துரைத்து வருவது எம் மக்கள் அனைவரும் அறிவார்கள். இருந்த போதிலும் மலையகத்தில் வாக்கு பெறும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா பெறும் ஒரு சில அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றார்கள். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக இந்த அமைதி என்று சந்தேகம் எழுகிறது .
சம்பள நிர்ணய சபையில் மலையக மக்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஒரு அணியாக நின்று எங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.
ராமு தனராஜா
