கம்பளையில் மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றியது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களிடமும், அவர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தவர்களிடமும் கடந்த 12 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (15) வெளியாகின.
இதில் குறித்த வைத்தியரின் தந்தை, தாய், மகள் மற்றும் பேரப்பிள்ளைக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தந்தையால் நடத்தப்படும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
குறித்த வர்த்தகருக்கு சொந்தமான நான்கு கடைகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டலொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைரஸ் தொற்றிய விதம் பற்றியும் சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர். வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று கொண்டுசெல்லப்பட்டனர்.










