கம்போடியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி பெனால்டி சூட் அவுட் முறையில் வரலாற்று வெற்றியை பெற்றது.
இலங்கையில் நடந்த முதல் சுற்றுப் போட்டி கோலின்றி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று நேற்று முன்தினம் கம்போடியாலில் இடம்பெற்றது. இதில் போட்டியின் முழுநேரம் முடியும்போது இரு அணிகளும் தலா 2 கோல்களை பெற்ற நிலையில் முடிவைத் தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. அதில் இலங்கை அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
தலைநகர் புனோம் பென்னில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பெனால்டி சூட் அவுட்டின்போது இலங்கை அணித் தலைவரான கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தீர்க்கமான தடுப்புகளை செய்தார்.
இரு அணிகளும் ஆரம்பத்தில் கோல் பெறத் தடுமாறிய நிலையில் பாதி நேரத்திற்குச் சற்று முன்னர் 37 ஆவது நிமிடத்தில் ஒலிவர் கெலார்ட் கோல் பெற்று இலங்கை அணியை முன்னிலை பெறச் செய்தார்.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் கம்போடியா ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் 50 ஆவது நிமிடத்தில் சொசிதான் நஹேன் பதில் கோல் திருப்பினார். இந்நிலையில் மேலதிக நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற போட்டி சமநிலையானது.
இந்நிலையில் பெனால்டி சூட் அவுட்டில் கம்போடியா அடித்த மு
தல் இரு உதைகளையும் இலங்கை கோல் காப்பாளரால் தடுக்க முடிந்தது.
இந்த வெற்றியுடன் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி பூட்டான் அணியை 2–0 என வீழ்த்திய பின்னர் இலங்கை அணி வெற்றியீட்டிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். அதேபோன்று 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி கம்போடியாவை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது.