கம்போடியா போர் நிறுத்தத்துக்கு அழைப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

கம்போடியாவில் நடந்த மோதல்களில் எட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தில், 15 பேர் இறந்துள்ளனர் மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் இருந்து 138,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் எல்லையில் உள்ள சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட காரணமாகும்.

இந்நிலையில் அண்மையில், எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதனால் தாய்லாந்து கம்போடியா மீது போர் விமானங்கள், பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

கம்போடியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் குறித்து ஐநா கவலை தெரிவித்தது. இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை விரும்புவதாகவும், நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைக்கு அமைதியான தீர்வைக் காண முயற்சிப்பதாகவும் கம்போடியா தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles