கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது.
32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக் கட்டையை உடைத்துக்கொண்டு பேருந்து மீது வேகமாக வந்து மோதியது. இதையடுத்து தீ பரவியது.
இதில் உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநர், லாரியின் கிளீனர் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காவல் துறை அதிகாரி ரவிகாந்த் கவுடா உறுதி செய்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
“தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு லாரி எங்கள் பேருந்துக்கு எதிரே வந்தது. அப்போது நான் பேருந்தை 60 – 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினேன். மோதலை தடுக்க முயற்சித்தேன். ஆனால், லாரி வேகமாக வந்த காரணத்தால் அது முடியாமல் போனது” என பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
