கலப்பு தேர்தல் முறைமையே அவசியம் – பரிந்துரை முன்வைப்பு

தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் கூடிய கலப்பு தேர்தல் முறை நாட்டுக்கு அவசியம் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் மக்கள் ஐக்கிய முன்னணி இன்று (06) தெரிவித்தது.
தற்பொழுது நடைமுறையில் காணப்படுவது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்றும், இதில் 140 பேர் தொகுதிவாரி முறையின் அடிப்படையிலும், 70 பேர் மாவட்ட அடிப்படையிலும், எஞ்சிய 15 பேர் தேசியப் பட்டியலின் ஊடாகவும் தேர்வுசெய்யப்பட வேண்டும் எனவும் அக்கட்சியின் உபசெயலாளர் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.
முழு நாடும் ஒரு தொகுதியாகக் கருதி நடத்தப்படும் தற்போது நடைமுறையில் உள்ள ஜனாதிபதி தேர்தல் முறை அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் புதிய திருத்தங்களின் போது ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேவை ஏற்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.
அத்துடன் அரசியல் ஆட்சி அதிகாரம் அழுத்தங்கள் இன்றி, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய காலம் மற்றும் திகதி சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் உதவிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்த்தன இந்தக் குழு முன்னிலையில் தெரிவித்தார். அரச மற்றும் தனியார் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களால் வேட்பாளர்களின் சமத்துவத்துக்கு தீங்கிளைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய தேர்தல் திருத்தத்தின் ஊடாக சகல இனக் குழுக்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விசேட குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியது. உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது அடிப்படைக் கொள்கையாக 65 வீதம் தொகுதிவாரி முறையும், 35 வீதம் விகிதாசார முறையும் அமைய வேண்டும் என அக்கட்சி குழு முன்னிலையில் தெரிவித்தது.
பிரதானமாக தொகுதிவாரி முறை நாட்டுக்கு அவசியமானது என தேசவிமுக்தி மக்கள் கட்சி பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தது. புதிய திருத்தங்களின் ஊடாக சகல கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அக்கட்சி சுட்டிக்காட்டியது.
பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவான முறையின் கீழ் நடத்தப்படுவதன் அவசியத்தையும் அக்கட்சி வலியுறுத்தியது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, டக்ளஸ் தேவானந்தா, பவித்திரா வன்னியாராச்சி, அலி சப்ரி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களான ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகேவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.
பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் நாளை (07) நடைபெறும் என அக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

Related Articles

Latest Articles