உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும் மஸ்கெலியா, காட்மோர் கல்கந்த தோட்ட மக்களின் தனி வீட்டு கனவு ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கல்கந்த தோட்டம் மஸ்கெலிய நகரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இது ஒரு தனியாருக்கு சொந்தமான தோட்டாகும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்தோட்டத்திற்கு தனி வீட்டு திட்டம் என்பது ஒரு எட்டா கனியாகவே காணப்படுகின்றது.
உயரமான ஒரு மலை பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக குடியிருப்புகளுக்கு மேலுள்ள மண் மேட்டில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு கற்பாறைகள் உருண்டு வீடுகளுக்கு சேதம் விளைவித்ததையடுத்து 47 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் காட்மோர் பாடசாலையில் இடம்பெயர்ந்தனர்.
மீண்டும் ஒரு மாதம் கடந்த நிலையில் அவர்கள் அபாய வளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். மாற்றிடங்களில் தனி வீடுகள் அமைத்து தருவதாக தேர்தல் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எந்நேரத்தில் வேண்டுமானாலும் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் மேலும் சிலர் தோட்டத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை பிரதிநிதிகள் மறந்துவிட்டார்கள் எனவும் எனவே, புதிய அரசாங்கத்திலாவது தமக்கு உரிய தீர்வு வேண்டும், பாதுகாப்பான இடங்களில் உரிய வகையில் வீடுகள் வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
( சாமிமலை நிருபர் _ சே. ஞானராஜ்