கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அருகிலுள்ள ‘பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 964 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 13697 வேலைத்திட்டங்களை 53 பில்லியன் செலவில் செய்திருந்தோம். ‘பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இன்னமும் முழுமைப்படுத்தப்படாதுள்ளது. இவற்றை நிறைவுசெய்ய வேண்டும்.
மலையக பகுதிகளில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன. 3,126 ஆசிரியர்களை மலையக பாடசாலைகளுக்கு நியமித்திருந்தோம். ஆனால், அவர்கள் பயிற்சியை நிறைவுசெய்துவந்தப் பின்னர் அவர்களை ஆசிரியர் தரத்துக்கு உயர்த்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. கடந்த சில நாட்களாக நாம்தான் நியமனங்களை வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். இது பொய்யான பிரசாரமாகும்.
மலையக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. கிட்டதட்ட 3,000 பேர் அவசியமாகவுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பாரிய பற்றாக்குறை உள்ளது. பாடசாலைகள் தரம் தொடர்பிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவையும் தீர்க்கப்பட வேண்டும்.
புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 75 சதவீதமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 64 சதவீதமாகவுள்ளது. க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் ஏனைய மாவட்டங்களில் 69.94 சதவீதமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 61 சதவீதமாகவுள்ளது. அதேபோன்று உயர்தர பெறுபேறுகள் ஏனைய மாவட்டங்களில் 63 சதவீதமாகவும் நுவரெலியா மாவட்டத்தில்43 சதவீதமாகவும் உள்ளது. ஆகவே, நுவரெலியா மாவட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூன்று மாதிரி பாடசாலைகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். அதில் ஒன்றை ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, பொலனறுவையில் அமைத்துக்கொண்டார். மற்றுமொரு பாடசாலையை குளியாப்பிட்டியில் அமைக்கப்பட்டது.
நுவரெலியாவில் அமைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இப் பாடசாலையை நுவரெலியாவில் அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்காக 400 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், காணியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம். அதனை அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.










