புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
மேற்படி இரு விடயங்களையும் முன்வைத்து கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தார்.
கோ ஹோம் ஹரிணி, கோ ஹோம் ஹரிணி என்ற கோஷத்துடன் சத்தியாக்கிரகத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராக செயல்படும் பிரதமர், கல்வி அமைச்சு பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என சுட்டிக்காட்டினார்.
ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்த போராட்டமும் அரசியல் நாடகமென சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகின்றது.
கல்வி அமைச்சுக்கு முன்பாக கூடாரம் அமைத்து விமல் தரப்பு போராட்டத்தை தொடர்கின்றது. கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த இடத்துக்கு இலங்கை கொடியுடன் வந்த நபரொருவர், பிரதமருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். அவரை அங்கிருந்தவர்கள் விரட்டினர்.
அதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன.
