பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த 21 மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதில், இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் ராணுவம், விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இடையில் கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதனை கடைபிடிக்கவில்லை என இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டின.
இதனையடுத்து மீண்டும் போர் துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
தற்போது இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், போரை நிறுத்துவதற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்படும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை ஏற்காத ஹமாஸ் அமைப்பினர், தங்கள் பிடியில் உள்ள எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாக மட்டும் கூறினர். இதனால், போர் நிறுத்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை நிலவுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில், தண்ணீர் பிடிக்கும் இடத்தில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிவாரண மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 28 பேர் உட்பட 59 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
கடந்த 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.