இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின் அமெரிக்க நேரப்படி நேற்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. ஆனால் போர் நிறுத்தம் ஒன்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்தவில்லை.
மறுபுறம் காசாவில் இதுவரை இல்லாத மோசமான போராக மாறி இருக்கும் இந்தப் போரை நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கொண்டுவரப்பட்ட நகல் தீர்மானத்தின் மீது கடந்த திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தவிருந்த நிலையில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு நேற்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. ஆதரவாக வாக்களிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்திருக்கும் இந்தத் தீர்மானத்தில், மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டபோதும், போரை உடன் முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தப்படவில்லை.
இந்தத் தீர்மானத்தில் “போர்நிறுத்தம்” என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்த இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வந்தது. ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் நிறுத்தம் இல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதன்கிழமை (20) கூறியிருந்தார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி 1200 பேர் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் இஸ்ரேலின் இடைவிடாத பயங்கரத் தாக்குதல்களால் காசா பகுதி பேரழிவை சந்தித்துள்ளது.
காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி இருப்பதோடு 6,000க்கும் அதிகமானவர்கள் காணமல்போயுள்ளனர். இவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காசாவில் ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்று ஐ.நா ஆதரவு உலகளாவிய பட்டினி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அரைமில்லியனுக்கும் அதிகமானோர் “பேரழிவு நிலைமையை” சந்தித்துள்ளார்கள் என்று அது குறிப்பிட்டுள்ளது.
“இத்தகைய இழப்பு மற்றும் அழிவுடன், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் காசா மக்களுக்கு மேலும் பசி, நோய் மற்றும் விரக்தியை மட்டுமே கொண்டு வரும் என்று நாம் பல வாரங்களாகக் கூறி வருகிறோம்” என ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்டின் கிப்பித், எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரை மில்லியன் பேர் பசியால் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகம்.
பஞ்சத்தில் வாடும் பகுதியாக வகைப்படுத்த சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று 20 வீதத்திற்கு அதிகமானோர் பட்டினியால் வாடுவது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு, மரணங்களின் எண்ணிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
மனிதநேய அடிப்படையிலான சண்டை நிறுத்தம் இந்த நிலையை மாற்றக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் கூறுகிறது.
தொடரும் உயிரிழப்புகள்
2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குறுகிய நிலப்பகுதியான காசாவில் தற்போது 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
தமது வீடுகள் அழிக்கப்பட்டு நெரிசல் மிக்க முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளை பெற போராடி வருகின்றனர். நோய்கள் பரவி வருவதோடு தொடர்பாடல்களும் அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்து துயரங்களை அனுபவித்து வரும் காசா மக்கள் போர் நிறுத்தம் ஒன்றை கோரி வருகின்றனர். “இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறேன்” என ரபாவில் உள்ள பசுமையில்லம் ஒன்றில் அடைக்கலம் பெற்றிருக்கும் புவாத் அப்ராஹிம் வாதி தெரிவித்தார்.
“இந்தப் போர் அழிவைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. இது போதும்” என்றார்.
பல வார அழுத்தத்திற்குப் பின்னரே இஸ்ரேல் காசாவுக்கு நேரடியாக உதவிகளை வழங்க முடியுமாக அதன் கெரம் ஷலோம் எல்லைக் கடவையை திறந்தது. ஏற்கனவே காசாவுடனான எகிப்து எல்லைக் கடலையான ரபா வழியாக மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் சென்று வருகின்றன.
எனினும் இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை இந்த கெரம் ஷலோம் எல்லையின் காசா பக்கமாக தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இந்த எல்லைப் பகுதியால் உதவிகள் செல்வதை உலக உணவுத் திட்டம் இடைநிறுத்தியது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தும் அதே வேகத்துடன் நீடித்து வருகிறது.
ரபாவில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் கொல்லப்படதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. கான் யூனிஸில் நடத்திய தாக்குதலில் மேலும் ஆறு பொதுக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் நடத்தும் சரமாரி தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாய் மற்றும் ஐந்து மகள்கள் உட்பட ஒன்பது பேரின் சடலங்களை மீட்பாளர்கள் மற்றும் அம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்டுள்ளனர். ஜபலியா நகர் மற்றும் ஜபலியா அகதி முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வபா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தொடர்பாடல்கள் தடைப்பட்ட சூழலிலும் கடந்த 48 மணி நேரத்தில் 390 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 734 பேர் காயமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது.
மறுபுறம் பலஸ்தீன போராளிகள் காசாவில் இருந்து டெல் அவிவை நோக்கி வியாழக்கிழமையும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசாவின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.