காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், பட்டினி நெருக்கடியை தவிர்ப்பதற்கு காசாவுக்கு ‘அடிப்படை அளவான’ உணவை அனுமதிக்க இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதோடு, காசாவில் புதிதாக தீவிரப்படுத்தி இருக்கும் தாக்குதல்களில் ‘விரிவான தரைவழி படை நடவடிக்கை’ ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்து சில மணி நேரங்களின் பின்னரே உதவிகளுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் காசா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்துள்ளார். ‘மோதல் தீவிரமடைந்திருப்பதோடு நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். அனைத்து நிலத்தையும் நாம் கைப்பற்றுவோம்’ என்று டெலிகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் முழுமையான முற்றுகையை அகற்றுவதற்கு, பிரதான ஆதரவு நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
இராணுவத்தின் பரிந்துரை அடிப்படையில் ‘காசா பகுதியில் பட்டினி நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மக்களுக்கான அடிப்படை அளவான உணவுகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்கும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி இராணுவத்தின் புதிய நடவடிக்கையை சீர்குலைக்கக் கூடும் என்றும் இந்த மனிதாபிமான உதவியை ஹமாஸ் கைப்பற்றுவதை தடுப்பதற்கு இஸ்ரேல் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் சரமாரி தாக்குதல்கள் இடம்பெறுவதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் நேற்று காலை தொடக்கம் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார். அருகில் இருக்கும் அப்சான் பகுதியில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் மற்ற பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 11 பேர் பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இதில் ஒரே குடும்பத்தின் மூவரும் அடங்குகின்றனர்.
இந்நிலையில் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் 46 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று காசாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேறும் உத்தரவை இஸ்ரேல் இராணுவம் நேற்று பிறப்பித்தது. கான் யூனிஸ் நிர்வாகப் பகுதி அபாயகரமான போர் வலயமாக கருதப்படுவதாக எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் முற்றாக முடக்கி இருப்பதோடு பலஸ்தீன போராட்ட அமைப்பு மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. எனினும் காசாவில் உணவு, சுத்தமான நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கடந்த வாரம் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘பெரும் எண்ணிக்கையான மக்கள் பட்டினியில் இருப்பதாகவும்’, ‘அதனை நாம் கவனத்தில் கொள்வோம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உதவியை ‘உடனடியாகவும், பாரிய அளவிலும், தடையற்ற வகையிலும் அனுமதிப்பதற்கு’ இஸ்ரேலின் புதிய அறிவிப்பை பின்பற்றும்படி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நொவேல் பரொட் வலியுறுத்தியுள்ளார்.
பாப்பரசர் 14ஆம் லியோ, நேற்று முன்தினம் தனது முதல் ஆராதனை கூட்டத்தில், போர் காரணமாக வேதனைப்படும் சகோதர, சகோதரிகளை நம்பிக்கையாளர்கள் மறந்துவிடக் கூடாது என்று அழைப்பு விடுத்தார். ‘காசாவில் உயிர் தப்பிய குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் வயதானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில், துருப்புக்கள் வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் விரிவான தரைவழி நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருப்பதாகவும் தற்போது முக்கிய நிலைகளில் அவர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் ஹமாஸை வீழ்த்தும் இலக்குடன் படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டபோதும் இரு தரப்பும் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தையையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சியாக டோஹா பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப்பும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.
காசாவில் இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்தே கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இஸ்ரேல் காசா மீது மீண்டும் உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது. போர் நிறுத்தத்தை எட்டுவதில்; எகிப்து, கட்டாருடன் அமெரிக்காவும் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் ஹமாஸை முழுமையாக தோற்கடிக்காதவரை போரை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு மறுத்து வருவதோடு, ஹமாஸ் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் விரிவான மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றுக்காக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க தயாராக இருப்பாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட ஹமாஸ் தரப்பு வலியுறுத்தி இருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்காக பணயக்கைதிகளின் ஒரு பகுதியினரை விடுவிக்க இஸ்ரேல் கோரி வருகிறது.