“ எதிரணிகளின் பலத்தை காண்பிக்கவே பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டேன். ஆனால் அந்த வாய்ப்பை எதிரணிகள் தவறவிட்டுவிட்டன. மக்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டனர்.”
இவ்வாறு பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதி சபாநாயகருக்கான தேர்வில் வெற்றிபெற்ற அவர், விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“ எதிரணிகளின் ஏகோபித்த ஆதரவுடன் எனது பெயரை பரிந்துரைக்கவே தீர்மானிக்கப்பட்டது. இன்று (நேற்று) காலைவரை அந்த முடிவுதான் இருந்தது. எதிரணியின் கூட்டு பலத்தை காண்பிப்பதற்கு நானும் முன்வந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை அக்கட்சிகள் பயன்படுத்தாமல் தவறவிட்டுள்ளன. வீதிகளில் போராடும் மக்களின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை தெளிவாகவே குறிப்பிடுகின்றேன்.
எனக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் வாக்களித்திருந்தாலும், சுயாதீனமாக செயற்படும் எமது அணியின் முடிவு மாறாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கானவொரு அழுத்தமாக எனது நியமனத்தை பார்க்கலாம்.” – என்றார்.










