யானை – மனித மோதல்கள் அதிகரித்து வருவதையடுத்து யானைகளை கலைப்பதற்காக தேவைப்படும் யானை வெடிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2,800 மில்லியன் ரூபாவை செலவிட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் அதற்கென 14 இலட்சம் யானை வெடிகள் தேவைப்படுவதாகவும் அவை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்தது.
காட்டு யானைகள் விவசாய காணிகள் மற்றும் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில் அவற்றை அங்கிருந்து கலைப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் மக்களுக்கு இலவசமாகவே யானை வெடிகளை வழங்கி வருகிறது.
அதேவேளை யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும்போது அவற்றைக் கலைப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் எந்தவித ஒத்துழைப்பும் கிடைப்பதில்லையென மக்கள் தமக்கு முறைப்பாடுகளை முன்வைத்து வருவதாக துறைக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அந்த அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
