பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ் மக்களுக்கே உரித்தான பிரச்சினைகள் தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி குறிப்பிடாமை கவலையளிக்கின்றது.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை, காணாமல்ஆக்கப்பட்டோருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். விசாரணைகளின் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதுடன் குற்றவாளிகளுக்கும் தண்டனை அவசியம். பொறுப்புக்கூறல் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் காணிப்பிரச்சினை உள்ளது. இதுவும் தீர்க்கப்பட வேண்டும். தொல்பொருள் பிரச்சினையும் உள்ளது. வனத்திணைக்களத்தின் பிரச்சினையும் உள்ளது. அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.” – என்றார்.










