அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குக் காணிகளை கையகப்படுத்தும் போது உரிய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான சட்டரீதியான திருத்தங்களை விரைவில் மேற்கொள்வதாக காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
சொத்துக்களைக் கையகப்படுத்தும் போது வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுவதாக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.
கிந்தோட்டை பலகைக் கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவில் கோரிக்கை விடுத்தார்.
சுற்றுலாத் துறைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய காணிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் இலகுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் அலகட்டுக்கரை பகுதியில் 800 பேருக்கு காணி உரிமைப்பத்திரங்களை வழங்கும்போது ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பிலும் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
காணிகளை இழந்த மக்களுக்கு அரசாங்கக் காணிகளை வழங்கும் வேலைத்திட்டம் கொவிட் 19 காரணமாகத் தாமதாமடைந்துள்ளதாகவும், தற்பொழுது அது இயல்பு நிலைக்கு வருவதாகவும் காணி ஆணையாளர் நாயகம் இங்கு குறிப்பிட்டார்.
அரசாங்கக் காணிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் நிலைமையொன்று தற்பொழுது காணப்படுவதாகவும், அதனை நிறுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
உதவி நில அளவையாளர் பதவிக்கு இணைத்துக்கொள்ளும் பரீட்சை அடுத்த வாரம் இடம்பெறுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அந்த பதவிக்கு 1500 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.