காணி உரிமையை வென்றெடுக்க இணைந்து பயணிப்போம் – சிவில் அமைப்புகளுக்கு வேலுகுமார் அழைப்பு

” மலையக மக்களுக்கான காணி உரிமையை வென்றெடுப்பதற்கு மலையக அரசியல் சக்திகளும், சிவில் செயற்பாட்டு சக்திகளும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தருமான வேலுகுமார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்களின் காணி உரிமைக்காக அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகின்றன.இது விடயம் தொடர்பில் இரு தரப்புகளுக்கும் இடையில் புரிந்துணர்வு இருத்தல் அவசியம்.

அரசியல் கட்சிகளின் முக்கியத்துவத்தை சிவில் அமைப்புகளும், அழுத்தக் குழுக்களாக செயற்படும் சிவில் அமைப்புகளின் முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் அதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

மலையக அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணைந்து செயற்பட்டதால் மலையகத்தில் கடந்த காலங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை படிப்பினையாகக்கொண்டு இவ்விவகாரத்தை அணுகினால் அது பயனுடையதாக அமையும்.

இரு தரப்புகளின் இலக்கு, நோக்கம் ஒன்றெனில் அதற்காக இரு வழிகளில் பயணிக்க வேண்டும்? காணி பிரச்சினையென்பது எமது மக்களுக்கான தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையென்பதால் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். காணி உரிமையை வென்றெடுக்க வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles