காணி உரிமையை வென்றெடுக்க மலையக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். எனவே, இது விடயத்தில் அனைத்து மலையக பிரதிநிதிகளும் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தொகுதி அமைப்பாளரும், கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவருமான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய 20 லட்சம் குடும்பங்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதேபோல கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் திட்டமும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. இனி அவர்கள் அரசுக்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

அதேபோல இந்நாட்டில் வாழும் சகல மக்களும் சொந்த காணியில், சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதின் எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்திவருகின்றார்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இது சம்பந்தமாக பேச்சு நடத்தி இருந்தார். மலையக பெருந்தோட்ட குடியிருப்பு பகுதிகளை நவீன கிராமங்களாக பிரகடனப்படுத்தும் திட்டம் சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் இத்திட்டம் வெற்றியளிக்க கட்சி, தொழிற்சங்க பேதம் மறந்து அனைத்து அரசியல்வாதிகளும், தொழிற்சங்க தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.

2 வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். வீதி அபிவிருத்தி உட்பட இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளும் மீள ஆரம்பமாகியுள்ளன. எனவே, தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சி தொடர வேண்டும். அதுவே இலங்கைக்கு பொற்காலமாக அமையும்.” – என்றார்.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles