மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி நுவரெலியாவில் இன்று (29) பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டே குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தினர் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் இணைந்து இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.
பேரணியானது முற்பகல் 11 மணிக்கு காமினி தேசிய பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் முன்னால் வீதி ஊடாக லோசன் வீதி மற்றும் நுவரெலியா பிரதான வீதி ஊடாக நுவரெலியா மாநகர சபையின் கேட்போர் கூடம் வரையில் சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து 12. 30 க்கு நுவரெலியா மாநகர சபையில் கேட்போர் கூடத்தில் தெளிவுபடுத்தல் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர்கள், தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தின் செற்பாட்டாளர் மாக்ஸ் பிரபாகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியின் பிரதான கருப்பொருளாக மீறியபெத்த மண்சரிவு அர்த்தம் நடந்து 11 வருடத்தை கடந்துள்ள நிலையில் அந்தத் தினமான இன்று காணி உரிமை தினமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்தோடு இதன் முக்கிய நோக்கமாக தோட்ட தொழிலாளிகளின் அடிப்படை சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்,
தோட்ட லயன் வீடுகளை ஒழித்து தனி வீடு தனி, காணியை பெற்றுக் கொடுக்க வேண்டும்,
அடிமைத்தனமான தோட்ட வாழ்க்கைக்கு முடிவு கட்டி உண்மையான உரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும்,
மலையக இளைஞர்களுக்கு தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக வழங்க வேண்டும் எனவும்,
தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும்,
உயர்தர கணித விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறை சார் கல்விகளுக்கு ஏற்ற வகையில் மலையக தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை விரித்து செய்ய வேண்டும் எனவும்,
மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும்,
வலியுறுத்தி இந்த பேரணி மற்றும் மக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
கஜரூபன் திவ்யா நுவரெலியா










