காணி உரிமை தொடர்பில் வேலுகுமார் எம்.பி. அரசுக்கு விடுத்துள்ள சவால்….!

” பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற உண்மையான அக்கறை இந்த அரசுக்கு இருக்குமானால், பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டின்கீழ் காணிகளை இலகுவில் வழங்கலாம். ஆனால் தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் என்பதால் அதனை அரசு செய்யாது. அவர்களை அடக்கி ஆளவே முற்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்நாட்டில் 10 மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்றனர். தேர்தல்காலங்களில் அவர்களிடம் வாக்கு கேட்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள்கூட செல்வார்கள். ஆனால் அம்மக்கள் தொடர்பில் பேசும்போது முன்வரிசையில் ஒரு அமைச்சர்கூட இல்லை. இதனால் கவலையடைகின்றோம்.

எமது மக்களுக்கான இருப்பு, அடையாளம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அவர்களுக்கு காணி உரிமை இல்லாமை இதற்கு பிரதான காரணமாகும். ஒரு அரசால் வழங்கப்படும் காணி மற்றுமொரு அரசால் பறிக்கப்படும் நிலைமையே நீடிக்கின்றது. சந்திரிக்கா ஆட்சியால் வழங்கப்பட்ட காணி, மஹிந்த ஆட்சியில் பறிக்கப்பட்டது.

நல்லாட்சியின்போது 7 பேர்சஸ் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னரான ஆட்சியில் 10 பேர்சஸ் என்றார்கள். ஆனால் நாவலப்பிட்டிய கலபொட உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட இடங்களும் மீள பறிக்கப்பட்டுள்ளன. ரணில் ஆட்சியில் வழங்கப்பட்ட காணி அவர் ஆட்சியின்கீழேயே பறிக்கப்படுகின்றது. எனவே , காணி உரிமை தொடர்பில் முறையான பொறிமுறை அவசியம்.

இன்று பெருந்தோட்ட கம்பனிகள் பற்றி பேசப்படுகின்றது, பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் உண்மையான அக்கறை அரசுக்கு இருந்தால் அரச பெருந்தோட்டங்கள் ஊடாக அதற்கான நடவடிக்கையை உடன் ஆரம்பியுங்கள். இதனை இலகுவில் செய்யலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles