நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
அத்துடன், வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரத்தின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் ஏழு பேர்ச்சஸ் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
எனினும், அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது எனவும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின்கீழ் அவை வரவில்லை எனவும் இ.தொ.கா. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும், குறித்த உறுதிப்பத்திரத்தை வங்கியில் வைத்து கடன்கூட பெறலாம் என பழனி திகாம்பரம் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.











