காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44-வது இடத்தைப் பிடித்த உகாண்டா வீராங்கனை, ரெபேக்கா செப்டேஜி (வயது 33). இவரின் காதலர் டிக்சன் எண்டிமா.
சில நாட்களுக்கு முன்பாக, ரெபேக்கா செப்டேஜி, கவுண்டி என்ற பகுதியில் பல தடகளப்பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனால், ரெபேக்காவிற்கும் அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பிரச்சினை பெரிதான நிலையில் கடந்த 1-ம் திகதி பெட்ரோல் வாங்கி வந்த டிக்சன், ரெபேக்காவின் மீது ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால், ரெபேக்காவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், காதலன் டிக்சனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் 75 சதவீத தீக்காயங்கள் ரெக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த ரெபேக்கா செப்டேஜி, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், குடும்ப வன்முறையால் துரதிர்ஷ்டவசமாக பலியாகிய எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று அதிகாலை காலமானதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம்.
ஒரு கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம், நீதிக்காக அழைக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்ஷ” என்று அதில் உகாண்டா தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.