காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கொலை செய்த மகன்!

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர் பிரிவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

நியாகமை பிரதேசத்திலுள்ள யுவதி ஒருவரை உயிரிழந்தவரின் மூத்த மகன் காதலித்து வந்துள்ளார். இதற்குத் தந்தை கடும் எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு மதுபோதையில் வந்த தந்தை, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் கத்தியால் தந்தை மீது குத்திப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தை அங்கு உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

கொலையாளியான 22 வயதுடைய மகனைக் கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles