மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வழங்கியிருந்தன. ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளும் தேர்தல் காலங்களில் இந்த உறுதிமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன.
2014 ஆம் ஆண்டு முதலே அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்ற கோஷம் தொடர்ச்சியாக எழுப்பட்டுவருகின்றது. மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் அடிப்படை ஆயிரம் பற்றி சூளுரைக்கும் அரசியல், தொழிற்சங்க பிரமுகர்கள், பேச்சுவார்த்தைக்கு சென்ற பின்னர் அதனை மறந்து, அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை பெறுவதற்கே முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.
இம்முறையாவது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என தொழிலாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பும் தவிடுபொடியாகியுள்ளது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கே தொழிற்சங்கங்கள் போராடுகின்றன.
