ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இது நிகழ்ந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக இரு அணிகளும் கடந்த 2017-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தது.
இம்முறை இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கக்கூடும். கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் சிறந்த பார்மில் உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் 2 அரை சதம், ஒரு சதம் விளாசிய ஷுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்கள் விளாசி அசத்தினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 விளாசி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார்.
அதே செயல் திறனை இருவரும் தொடர்வதில் முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் தடுமாறிய விராட் கோலி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். நேற்றைய பயிற்சியின் போது அவர், சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இதற்குரிய பலனை பெறுவதில் விராட் கோலி ஆர்வம் காட்டக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் பலமாக உள்ளது.
இதில் ஹர்திக் பாண்டியா எப்போதும் முக்கியமான ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தனி வீரராக போராடி ஹர்திக் பாண்டியா போராடியிருந்தார். ஆனால் முக்கியமான கட்டத்தில் அவர், ரன் அவுட் செய்யப்பட்டிருந்தார். அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியாமல் போன ஏமாற்றத்தை அவர், இன்றைய ஆட்டத்தில் ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்த்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்திய அசத்திய அவர், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஷமிக்கு உறுதுணையாக ஹர்ஷித் ராணா செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி களமிறங்க வாய்ப்பு உள்ளது.
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. நியூஸிலாந்திடம் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியில் காயம் காரணமாக முன்னணி பேட்ஸ்மேனான ஃபகர் ஜமான் விலகி இருப்பது அணியின் பலவீனத்தை அதிகரிக்கக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் 320 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அஸம் மந்தமாக விளையாடி 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ரன் ரேட் அதிகம் தேவைப்பட்ட நிலையிலும் பாபர் அஸம் எந்தவித முயற்சியும் எடுக்காதது அவரது திறன் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால் அவர், மிகுந்த நெருக்கடியுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு 69ரன்கள் சேர்த்த குஷ்தில் ஷாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். சல்மான் அலி ஆகா, ரிஸ்வான் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் வீரர்கள் ரன்களை வாரி வழங்கியிருந்தனர். இதில் ஹாரிஸ் ரவூப் 83 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஷாகிப் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோரும் தலா 60 ரன்களுக்கு மேல் வழங்கியிருந்தனர். இது ஒருபுறம் இருக்க துபாய் ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணி வீரர்கள் தகவமைத்துக் கொண்டுள்ளதால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை சந்திக்கக்கூடும்.
