” ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனித்து சவாலை ஏற்று 200 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதுபோல்தான் ரணில் விக்கிரமசிங்கவும் தனித்து சவாலை ஏற்று, செயற்பட்டுவருகின்றார்.” – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மேக்ஸ்வெல்லுக்கு தட்டிக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலிய அணித்தலைவர் களத்தில் இருந்தார். ஆனால் அந்த பாத்திரத்தை ஏற்பதற்கு இலங்கையில் எவரும் இல்லை. ரணில் அடித்தாடுகின்றார், அவரை ஆட்டமிழக்க வைக்கவே ‘அவர்’ (சஜித்) முற்படுகின்றார் – எனவும் ஹரின் கவலை வெளியிட்டார்.
” அவருக்கு நாட்டின் தலைவராக முடியாது. எனவே, இலங்கை அணி தலைவராக முயற்சிக்கின்றார்போலும். அவர் யாரென நான் பெயர்கூற விரும்பவில்லை. ‘ஆசை ஆனால் பயம்’ என அடையாளப்படுத்துகின்றேன்.” – எனவும் ஹரின் குறிப்பிட்டார். (சஜித்தையே இவ்வாறு அடையாளப்படுத்துகின்றார்.)
” கிளென் மேக்ஸ்வெல் தனித்து ஆடினார். இறுதியில் தொடர் வெற்றிகளை பெற்ற இந்திய அணியையும் வீழ்த்தி ஆஸி. அணி கிண்ணம் வென்றது. எனவே, கிளென் மேக்ஸ்வெல் பாணியில் ஆடும் ரணில். நிச்சயம் வெல்வார். நாட்டை மீட்டெடுப்பார்.” – எனவும் ஹரின் நம்பிக்கை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர், மேக்ஸ்வெல்லையும், ரணிலையும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டார்.
” பாதீட்டு உரை இடம்பெற்றாலும் கிரிக்கெட் பற்றியும், கோப் குழு பற்றியுமே இங்கு அதிகம் பேசப்படுகின்றது. எனவே, ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் பற்றிய இந்த விவாதத்தில், கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றை குறிப்பிட்டு, விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.” – எனக் கூறிவிட்டே மேற்கண்டவாறு விளக்கமளித்தார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.