” குருணாகலை மாவடத்தில் பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் தனித்தனி வீடும், காணியும் வழங்கப்பட வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அபிலாஷையாகும். அவர் தொட்ட பணியை நிறைவேற்றி முடிக்க இலங்கை தெழிலாளர் காங்கிரஸ், இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 100 வீடுகளை அமைத்து கொடுக்கவுள்ளதாக இ.தொ.கா சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் சட்டத்தரணியுமான பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
குருநாகலை மாநகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” 80 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் எமது ஸ்தாபனம் பெருந்தோட்ட மக்களுக்கு அர்பணிப்புடன் ஆற்றிய சேவைகள் ஏராளம். இந்த வகையில் நாம் குருநாகலை பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இவர்களது வாழ்வு செழிப்பாகவும் உயரவும் வழிவகைகளை செய்து கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.
இதற்கான ஒரு காத்திரமான தீர்வை அடைவதற்கு இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களின் நலனில், இ.தொ.கா. அக்கறை காட்டி வருகின்றது. அமரர் ஆறுமுகன் தொண்டமான், இங்கு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கான கட்டிடங்களை வழங்கியுள்ளர். கல்வியில் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அவரது வாஞ்சையாகும். இ.தொ.கா. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு பிரதிநிதியை நிறுத்தியதன் காரணமாகவே, அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் மாநகர சபைக்கு மேயராக வரும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு, குருநாகலையில ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
33 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற இப் பிரதேசத்தில் மூன்று பெருந்தோட்டயாக்கங்களும், தனியார் தோட்டங்களும் அமைந்துள்ளன. 25 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இம்மக்களுக்க இ.தொ.கா. அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் தனது சேவைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளதால் இ.தொ.கா. பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அவரது பரிந்துரைக்கேட்ப அங்கு வீடமைப்புத்திட்டம், தொழிற்சங்க விஸ்தரிப்பு, இந்துக் கோவில்கள் புனரமைப்பு, தமிழ் பாடசாலைகள், தரமுயர்தல் முதலானவைகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்பட வேண்டியதோடு, எமது அடுத்த முதற்கட்டப்பணியாக அலுவலகம் ஒன்றை விரைவில் திறந்துவைத்து பணிகளை மேற்கொள்வதற்க்கு ஏதுவாக அமையும் என்பதை பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.