நாட்டை பிளவுபடுத்தாமல் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கினர். அந்த ஆணையை தவறாகவே சிலர் பறித்தெடுத்தனர். அதனை நிச்சயம் நாம் மீளப்பெறுவோம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“புலிகளுக்கு உதவிய துஷ்ட சக்திகள் இணைந்தே 2015 இல் நல்லாட்சியை உருவாக்கின. 6.8 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.
வடக்க, கிழக்கில் விகாரைகள் தரைமட்டமாக்கப்பட்டன. பிக்கு ஒருவரின் சடலத்தைக்கூட புதைக்க முடியாத நிலைக்கு நாட்டை கொண்டுவந்தனர். எம்.சி.சி. உடன்படிக்கை உட்பட நாட்டை பிளவுபடுத்தும் ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால்தான் நாட்டு மக்கள், நாட்டுக்காக ஒன்றிணைந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்பினர். நாட்டை பாதுகாப்பதற்காகவே இக்கட்சி உருவாக்கப்பட்டது. தேர்தல்களில் அமோ வெற்றியை கட்சிக்கு மக்கள் பெற்றுகொடுத்தனர்.
மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நாட்டுக்கு செய்ய வேண்டிய விடயங்களை நாம் செய்தோம். எனினும், கொரோனா பெருந்தொற்றால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அப்போதுகூட நாட்டு மக்களின் உயிரை காக்கவே முன்னுரிமை வழங்கினோம்.
2015 இல் சூழ்ச்சியில் ஏற்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. சிலருக்கு கட்சி தலைமை பதவிகூட பறிபோயுள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன. சிலருக்கு வாக்கு கேட்க கட்சி இல்லை. எமது பின்னால் வருகின்றனர்.
அதேவேளை, நாட்டை விற்கவோ, பிளவுபடுத்தவோ, ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ 69 லட்சம் பேர் எமக்கு வாக்களிக்கவில்லை. இவற்றை பாதுகாக்கவே எமக்கு ஆணை வழங்கினர். எனினும், அவ்வாறு வழங்கப்பட்ட ஆணையை சிலர் தவறாக பறித்துக்கொண்டனர். எம்மிடமிருந்து தவறாக பறிக்கப்பட்ட அதிகாரத்தை மீளப்பெறுவோம். எமக்குரியதை நாம் நிச்சயம் மீளப்பெறுவோம்.” – என்றார்.