அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்பது தனது கருத்தென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
” ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை நாங்கள் கட்டாயம் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி அங்கு இருப்பதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது. ஆனால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து வெளியேற்றுவதாக இருந்தால் அதற்கு பதிலாக யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது. அதற்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்த்துக்கொண்டே நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
நாட்டிலுள்ள ஸ்திரத்தன்மை இல்லாது போய்விட்டால் பொருளாதார ரீதியான மீள்கட்டுமானம் என்பது பாதிக்கப்படும். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என தமிழ் மக்கள் இருக்கின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசில் சலுகைகளைப் பெற்றிருந்தது.
ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. இவர்களை வெளியேற்றிவிட்டு யாரை நம்ப போகின்றோம் என்ற கேள்வி இருக்கிறது. ஆகவே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப்பட்டால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
ஜனாதிபதி என்பதில் அவர் செய்த பிழைகள் இருக்கின்றன. அதேபோல பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது செய்த பிழைகள் பல இருக்கின்றன.ஆனால் ஜனாதிபதி என்ற முறையில் அவர் செய்த பிழைகள் என்று எடுத்து பார்ப்போமானால் முதலாவதாக பதவிக்கு வந்தவுடன் 2019 நாட்டுக்கு பெற வேண்டிய வரிகளை குறைத்து. தனது ஆதரவாளர்களுக்கு நன்மையை கொடுக்கும் வண்ணம் பெருவாரியான வருமானத்தை இல்லாமல் செய்தது குற்றம்.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க வேண்டும். உண்மையும் இதுதான். அவரது கையாலாகாத்தனத்தினாலேயே நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது என்றார்.