‘குளவிக்கொட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு’ – நுவரெலியா கூட்டத்தில் தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிரநோக்கும் குளவி, தேனீ கொட்டு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகளாக உள்ளுர் வெளிநாட்டு பயணிகள் எந்த தடையுமின்று வருகை தர முடியும் என்று இன்று (26.0.2021) நுவரெலியாவில் நடைபெற்ற ஜீவனோபாய (வாழ்வாதார) அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இன்னும் மூன்று வருடத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மரக்கறி விதைகள், விதை உருளைக் கிழங்கு என்பன முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஜீவனோபாய (வாழ்வாதார) அபிவிருத்தி குழு கூட்டம் இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சரகளான சீ.பி.ரட்ணாயக்க, மகிந்தானந்த அலுத்கமகே, பிரசண்ண ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், சதாசிவம் வியாழேந்திரன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் யு.எல்.கமகே, நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார உட்பட அரச திணைக்கள அதிகாரிகளும் நிறுவனத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பல முக்கிய தீர்மானங்களாவன,

இந்த அரசாங்கம் கால் நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் மூன்று மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கரக்கும் இயந்திரம் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான ஏனைய பொருட்கள் அவர்களுக்கான வங்கிக் கடன் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளிலும் தோட்ட தொழிலார்களும் ஏனையவர்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரித்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவி வருவதை இனம் காணப்பட்டுள்ளதுடன் விசேடமாக வைத்தியர்கள் வாகனம் ஏனைய அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகள் அனைத்தும் மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு தேவையான அமைச்சர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விவசாயத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதுடன் விவசாய பயிர்களை நாசமாக்குகின்ற விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு மின்சார வேலி உட்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் கடந்த பல வருடங்காளாக மாறிவருகின்ற மிகவும் இன்றியமையாத பிரச்சினைகளில் ஒன்றான குளவி கொட்டு மற்றும் தேநீக்கள் மூலமாக ஏற்படுகின்ற பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது எனவும் இது தொடர்பாக நன்கு பயிற்றப்பட்டவர்களை இந்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறிப்பான நோர்வூட் மைதானத்திற்கு இந்திய பிரதமர் மோடி வருகை தந்த பொழுது எவ்வாறு குளவி கூடுகளும் தேன் கூடுகளும் அகற்றப்பட்டதோ அதே முறைமையை கையாள்வது எனவும் தீர்மானிக்கபட்டது.

விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகள் தற்பொழுது அதிக அளவிலான இரசாயன உரவகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.அதற்கு காரணம் இங்குள்ள மண் உரிய இரசாயன முறைப்படி பரிசோதனை செய்யப்படுவதில்லை.எனவே அதற்கு தேவையான நடவடிக்கையை விவவசாய திணைக்களத்தின் மூலமாக முன்னெடுத்து அதன் மூலமாக விவசாயிகள் பயனை பெற்றுக் கொள்ள முடியும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நுவரெலியாவில் அழிந்து போயுள்ள பெயாஸ் உற்பத்தியை மீண்டும் அதிகரிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கும் விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அதற்கு தேவையான அற்pக்கை ஒன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

ஏந்த காரணம் கொண்டும் தோட்ட கம்பனிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ள பெருந்தோட்ட காணிகளை வெளியாருக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுக்க முடியாது.பல பெருந்தோட்ட கம்பனிகள் வெளியாருக்கு பெற்றுக் கொடுத்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளது.எனவே எதிர்காலத்தில் எந்த காரணம் கொண்டும் வெளியாருக்கு குத்தகைக்கு பெற்றுக் கொடுக்க முடியாது.எனவும் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் ஏகமனதாக தீர்மானம் எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles