பலாங்கொடை பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் குளவிக்கூடுகளால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தோட்டப் பகுதிகளில் உள்ள தேயிலைச் செடிகளிலும் மரங்களிலும் குளவிகள் பெருமளவில் கூடுகளை கட்டி இருப்பதால் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தேயிலைச் செடிகளிலும் மரங்களின் கிளைகளிலும் குளவி கூடுகட்டி இருப்பதால் எச்சந்தர்ப்பத்திலும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்ற அச்சத்தில் இவர்கள் தொழில் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் பணியாற்றும் போது குளவிகள் விரட்டியதால் தொழிலாளர்கள் தப்பி பிழைத்து ஒடிய சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள குளவிக் கூடுகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ராஸ்ஸகல, மாரதென்ன, சமனலவ, தந்த ஹிடுவல, வலேபொட வெலே, கும்புற ஹெரமிட்டிகல, ஊவெல்லறை தோட்டம் , ஓபநாயக்க ஆகிய தோட்டப் பிரதேசங்களிலேயே இவ்வாறு குளவிகள் கூடுகள் கட்டியுள்ளதால் அச்சுறுத்தல் நிலை தொடர்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் தமக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.